Thursday, September 16, 2010

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  


"ATHEISM (நாத்திகம்)" கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன "Agnosticism"?

உங்களில் சிலருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதனால், முதலில் "Agnosticism" என்றால் என்னவென்று பார்த்துவிட்டு பிறகு பதிவுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ். 

நாத்திகத்தை பின்பற்றுபவர் நாத்திகர் என்றால், "Agnosticism"தை பின்பற்றுபவர் "Agnostic (அக்னாஸ்டிக்)". 

(குறிப்பு: அக்னாஸ்டிக் என்பதற்கு சரியான தமிழ் பதம் தெரியாததால் அப்படியே பயன்படுத்தபடுகின்றது. அறிந்தவர்கள் தெரிவிக்கவும்) 

இவர்களும் நாத்திகர்களைப் போல கடவுளைப் பற்றி பேசும் மதங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், நாத்திகர்களைப் போல கடவுள் இல்லையென்று ஆணித்தரமாக மறுக்க மாட்டார்கள். கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்பது இவர்களது கொள்கை. 

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது, கடவுளைப் பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள். 

Agnostic - One who is skeptical about the existence of God but does not profess true atheism      

ஏன் அக்னாஸ்டிக் பற்றி பேசுகிறோம்? 

ஏனென்றால், இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது அப்படியிருந்த ஒரு நபரைப் பற்றி தான். அவர் அக்னாஸ்டிக்காக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர். 

சகோதரர் ஹம்சா அன்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (Hamza Andreas Tzortzis) இங்கிலாந்தை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இவர், பிரிட்டனின் புகழ் பெற்ற தாவாஹ் அமைப்பான இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Islamic Education and Research Academy, IERA) முக்கிய உறுப்பினர். 



பிரபல நாத்திகர்களுடன் தொடர்ந்து நேரடி விவாதத்தில் பங்கேற்றுவரும் இவரைப் பற்றி நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சிறிது பார்த்திருக்கின்றோம் (பார்க்க எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு). 

இன்ஷா அல்லாஹ் இந்த பதிவில் அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து One Legacy வானொலிக்கு அளித்த பேட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.                  


"என்னுடைய தந்தை கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர், என் தாய் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தவர். என் பெற்றோர்கள் எந்தவொரு மதத்தின் மீதும் ஆர்வம் காட்டியதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை கூறியது இன்னும் நினைவிருக்கின்றது, 

"கடவுள் உனக்குள்ளேயே இருக்கின்றார்"

என் தந்தையின் அறிவுரைகள் பெரிதும் உதவின. சிறு வயதிலிருந்தே எதையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பேன். புது விஷயங்களை படிப்பதிலும் ஆர்வம் அதிகம். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். இஸ்லாம், பௌத்தம் என்று பல மதங்களை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தேன். 

இவ்வுலகம், நாம் இங்கிருப்பதற்க்கான காரணங்கள் என்று இவற்றை தேடுவதில் தனி விருப்பம்.  
      
எனக்கு புத்த மதத்தின் மீது ஒருவித ஈர்ப்பிருந்தது. அதற்கு காரணம், அது அக்னாஸ்டிக் வகையான மதம் என்பதால் தான். உதாரணத்துக்கு, புத்தரிடம் ஒருவர் கேட்டாராம், 

"கடவுள் இருக்கிறாரா?" 

அதற்கு புத்தர் சொன்னாராம், 

"இருந்தாலும் பிரச்சனையில்லை (It does not matter if he exists)" என்று, “இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்" 

இது போன்றவற்றால் புத்த மதம் என்னை பெரிதும் வசீகரித்தது.

எனக்கு இஸ்லாம் நன்கு அறிமுகமானது பள்ளி காலங்களில் தான். என்னுடன் படிக்கும் முஸ்லிம் நண்பர்களிடம் பல கேள்விகளை கேட்பேன். 

"ஏன் இப்படி உடையணிகின்றீர்கள், ஏன் ஐவேளை தொழுகின்றீர்கள், ஏன் மற்றவர்களை சகோதரரென்று அழைக்கின்றீர்கள்" என்று பல கேள்விகள்.  

அவர்கள் எளிமையாக பதிலளித்துவிடுவார்கள், "இஸ்லாம் சொல்கிறது, செய்கிறோம்", அவ்வளவுதான் அவர்களது பதில். 

சில சமயங்களில் அவர்கள் இஸ்லாம் சொல்லாத செயல்களை செய்தால், "இது இஸ்லாமிய வழியில்லையே" என்று எடுத்துக் கூறுவேன். என்னுடைய இந்த அறிவுரைகள் அவர்களுக்கு வியப்பைத் தரும். 

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்தவொரு ஈடுபாடும் கிடையாது, “உங்கள் மதம் பற்றி எனக்கும் தெரியும்” என்று காட்டிக்கொள்ளவே இதெல்லாம். 


பல்கலைகழகத்தில் உளவியல் பாடத்தில் சேர்ந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் (Police IT Department) வேலைக்கு சேர்ந்தேன். இது பிரிட்டன் வெளியுறவுத் துறையின் கீழ் வருகின்றது. ஐரோப்பிய அலுவலக கலாச்சாரங்கள் அறிமுகமாயின. 

அது ஒரு கிறிஸ்துமஸ் சமயம். பார்ட்டிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. என் அலுவலகத்திலும் அது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளியிலிருந்தும் பலரை அழைத்திருந்தார்கள். 

எனக்கு நடனமெல்லாம் வராது. ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். மது, ஆட்டம், பாட்டம்.           

அப்போது ஒரு பெண் என் அருகில் வந்தார். அவரது பெயரைக் கேட்டேன். சொன்னார். எனக்கோ ஆச்சர்யம். அது இஸ்லாமிய பெயராக தெரிந்தது. நான் மறுபடியும் அவரிடம் கேட்டேன். 

"நீங்கள் முஸ்லிமா?" 

"ஆம், முஸ்லிம்தான்" 

அதை கேட்டவுடன் எனக்கு மிகுந்த அதிர்ச்சி. 

என்ன? பார்ட்டிகளில் ஒரு முஸ்லிமா? 

"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் இங்கே? ஒரு முஸ்லிம் இங்கெல்லாம் வரக்கூடாதே?

நான் அப்படி கேட்டதும் அவரது முகம் சோர்ந்து விட்டது. அவரது கையில் இருந்த மதுவை வாங்கி அதற்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறை ஊற்றி கொடுத்தேன். முஸ்லிம்கள் தான் மது அருந்தக் கூடாதே. என்னுடைய செயல் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

"என்ன செய்கின்றீர்கள் நீங்கள்? என்னுடைய மார்க்கத்தை எனக்கே சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றீர்கள், அதுவும் இந்த சூழ்நிலையில்..." 

என்னுடைய செயல் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. 

இருவரும் உரையாடத் துவங்கினோம். கலாச்சாரங்கள், இஸ்லாம் என்று பலவற்றையும் பேசினோம். நிச்சயமாக இது போன்ற பேச்சுக்களுக்கு அது சரியான இடமல்ல. எங்களை சுற்றி மது, ஆட்டம், பாட்டம் தான். நீங்களே யூகித்து கொள்ளுங்கள் அந்த சூழ்நிலையை.   

அதற்கு பிறகு பல மாதங்கள் கடந்தன, அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருநாள் என் அலுவலகத்தின் மனிதவளத்துறையிலிருந்து அழைப்பு. 

"மிஸ்டர் ஜார்ஜியஸ், ஒரு பெண்மணியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு" 

யாரது? அலுவலக தொலைப்பேசியில் அழைப்பது?

தொலைப்பேசியை வாங்கினேன். அந்த பெண் தான். எங்களின் பழைய சந்திப்பின் போதே கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். ஆனால் அவர் அதை தொலைத்திருக்கின்றார். இப்போது என் அலுவலக எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்து விட்டார்.

மறுபடியும் எண்களை பகிர்ந்துக் கொண்டோம். இந்த முறை எங்கள் நட்பு மேலும் வளர்ந்தது. அருங்காட்சியகம், சினிமா, பார்ட்டிகள் என்று ஒன்றாக செல்ல ஆரம்பித்தோம். ஐரோப்பிய கலாச்சாரத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 

ஆனால் நான் அவருடன் இருந்த நாட்களில் இஸ்லாமைப்பற்றி அதிகம் பேசியிருக்கின்றேன். ஆனால் அவருக்கோ அவையெல்லாம் விநோதமாக இருந்தது. நிச்சயமாக அவருக்கு அது பிடிக்கவில்லை. ஒரு ஆண் தோழர் இப்படி பேசுவதை அவர் விரும்பவில்லை. 

பிறகு நாங்கள் அவரவர் வழியே சென்று விட்டோம். அவர் ஆசிரியராக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார், அது நிமித்தமாக வட இங்கிலாந்திற்கு சென்று விட்டார். 

சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். கீழேயிருந்து என் தந்தை சத்தமாக அழைத்தார்,

"அன்ட்ரியஸ், உனக்கு ஒரு அழைப்பு" 

தூக்க கலக்கத்திலேயே கீழே இறங்கி வந்தேன்.    

"நான் தான் (It's me)" 

சுதாரித்து கொண்டேன். அதே பெண்தான். 

"ஒ................." 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு ஏன் அவர் அழைக்க வேண்டும்?

"உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தற்போது இஸ்லாமை முழுமையாக பின்பற்ற தொடங்கியிருக்கின்றேன். ஐவேளை தொழுகின்றேன். ஒரு இஸ்லாமிய பெண் எப்படி உடையணிய வேண்டுமோ அப்படி அணிகின்றேன்"

அவ்வளவுதான் பேசினார். என் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை, இணைப்பை துண்டித்து விட்டார். 

என்னால் நம்பவே முடியவில்லை. This is amazing.............  

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்த காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண் தன் மார்க்கத்துக்குள் திரும்பி வர நான் காரணமாய் இருந்திருக்கின்றேன், எப்படி? 

என்னால் மறக்க முடியாத, என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு அது.  

பிறகு, வாழ்வின் அர்த்தங்களைப் (Purpose of Life) பற்றிய என்னுடைய தேடல் தீவிரமடைந்தது. சாதாரண நாற்காலியே ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் போது, நாம் இவ்வுலகில் இருப்பதற்கு காரணமே இல்லையா? இது போன்ற கேள்விகள் என்னுள் அதிகம் எழ ஆரம்பித்தன. என் தேடல் விரிவடைந்தது. 

காட்டின் ஒரு மூலையில் வாழும் ஒரு வித அந்துப்பூச்சிகள் (Moth), மரத்திலிருந்து வழியும் பாலை (Sap) அருந்தி வாழுகின்றன. அதே மரத்தில் அவற்றிற்கு கீழே உள்ளே மற்றொரு வித அந்துப்பூச்சிகள், முதல் வித அந்துப்பூசிகள் வெளியேற்றிய கழிவுகளை பருகி வாழ்கின்றன. இவையெல்லாம் தானாகவே தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது போன்ற வாதங்களை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

நாமனைவரும் மிருகங்கள் என்றால் ஒழுக்கம் (Morale), எது சரி எது தவறு போன்றவை எப்படி தெரியும்? 

இவ்வாறாக, வாழ்வின் அர்த்தம் (Purpose of Life), தத்துவம் (Philosophy), அறிவியல் (Science), தர்க்கவியல் (Logic) என பல துறைகளை துணையாகக் கொண்டு எனது தேடல்கள் விரிவடைந்தது. 


கடவுள் என்ற ஒரு கோட்பாடு (concept) இல்லாமல் எதுவும் அறிவுக்கு ஒத்துவரவில்லை (This is the only thing that makes sense). மிக நீண்ட தேடல்களுக்கு பிறகு கடவுள் நிச்சயமாக இருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்தேன். 


இப்போது யார் என்னிடத்தில் வந்து கடவுள் இல்லையென்றாலும் அவர்களுடன் தர்க்கரீதியாக விவாதித்து கடவுள் உண்டு என்று நிரூபிக்கும் அளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

சரி, கடவுள் உண்டென்ற முடிவுக்கு வந்தாகி விட்டது. கடவுள் நம்மை படைத்து அப்படியே விட்டு விட்டாரா?, நமக்கு எதுவும் சொல்ல அவர் விரும்பவில்லையா? 

கடவுள் இருக்கிறாரென்றால் அவர் நமக்கு நிச்சயம் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் (He must have expressed something). அது தான் அறிவுக்கு ஒத்து வருகிறது.

இப்போது குரானை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். 

குரான், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குரான் எனக்கு சிறந்ததாக தெரிந்தது. 

ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது.           

என்னை மிகவும் பாதித்த குரானுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை. 

சரி, குரான் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குரானைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குரானைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். 

இப்போது, குரான் ஒரு அதிசயம் (Miracle) என்று வாதிக்குமளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

ஆக, இறைவனைப் பற்றியும் சரி, குரானைப் பற்றியும் சரி, விவாதிக்க நான் தயார்.

எல்லாம் தான் தெளிவாகி விட்டதே. நான் அப்போது முஸ்லிமாகி விட்டேனா என்று நீங்கள் கேட்டால்..... இல்லை.

அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. இஸ்லாம் என்ற கொள்கை அந்நியமாக தெரிந்தது. என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. இஸ்லாம் என்ற ஒரு வரையறைக்குள் என்னால் வர முடியவில்லை. எனக்குள் அறிவார்ந்த விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தேன் (I started to play intellectual Gymnastics). இதுவென்ன புது குழப்பம்? புரியவில்லை.

குரானை எடுத்துக்கொண்டு கிரீசுக்கு என் தாத்தா பாட்டியுடன் சிறிது காலம் தங்கி வரலாம் என்று சென்றேன். அங்கு தான் தொழுகையை செயற்படுத்தி பார்த்தேன். 

இங்கிலாந்திற்கு திரும்பினேன். என்னுடைய குழப்பங்கள் அதிகமாகியிருந்தது. அப்போது ஒரு கல்லூரி மாணவர் சொன்னார்,

"நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ஒருவர் சஜ்தாவில்  இருக்கும்போது இறைவனுடன் நெருக்கமாக இருக்கின்றார்"    

அப்படியா?, அடுத்த முறை நான் சஜ்தா செய்த போது, உரக்க கூறினேன்,

"இறைவா, தயவு கூர்ந்து எனக்கு உதவி செய் (come on, solve my problem). எனக்குள்ளே என்ன நடக்கின்றது? நீ இருக்கின்றாய் என்று என்னால் நிரூபிக்க முடியும். குரான் ஒரு Miracle என்று என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் என்னால் முஸ்லிமாக முடியவில்லை. இது மிகப் பெரிய குழப்பம். உதவி செய், தயவு கூர்ந்து உதவி செய்" 

ஒன்றும் நடக்கவில்லை...............Nothing was ticking......................finished. 

அக்னாஸ்டிக்காக தொடர்ந்து விட வேண்டியது தான்.

அது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி. அதிகாலை இரண்டு மணி. கதவு தட்டும் சத்தம். என் நண்பர். இந்த நண்பருடைய வீடு என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் தான் இருக்கின்றது. ஆனால் அவர் என் வீட்டிற்கு அவ்வளவாக வந்ததே கிடையாது. ஆனால் இப்போதோ அதிகாலை இரண்டு மணி. எதற்கு வந்திருக்கின்றார்? 

வெளியே அழைத்தார். பேசிக்கொண்டே நடந்தோம். அவர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குரான் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு. 

அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே................

என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது.

அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். 

"இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)"            

அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின. 

அடுத்த நாள். டாக்சியை பிடித்தேன். அருகிலிருந்த பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த சுமார் ஐம்பது சகோதரர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்"
               

சுபானல்லாஹ்... 

சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, தர்க்க ரீதியாக சொல்ல விரும்புபவர் சகோதரர் ஹம்சா அவர்கள். நாத்திகர்களுடனான அவரது பல வாதங்கள் யுடியூபில் (You tube) கிடைக்கின்றன. அவரது தளத்திலும் (முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவற்றை பார்க்கலாம். 

நாத்திகர்களுடனான உங்கள் உரையாடல்களுக்கு நிச்சயமாக சகோதரர் ஹம்சாவின் பதிவுகள் மற்றும் வீடியோக்களை பரிசீலிக்கலாம். 


வரும் ஜூன் பத்தொன்பதாம் தேதி (19th June, 2010)  லண்டனில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் எட் பக்னோருடன் (Dr. Ed Buckner, President of American Atheists), "இஸ்லாமா, நாத்திகமா" என்ற தலைப்பிலான நேரடி விவாதத்தில் பங்கேற்கவிருக்கிறார் ஹம்சா அவர்கள்.

நீங்கள் லண்டனில் வசிப்பவராக இருந்தால், "Friends House, Main Hall, 173-177 Euston Road, London, NW1 2BJ" என்ற முகவரியில் நடக்கும் இந்த விவாதத்தை நேரில் சென்று பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஹம்சா அவர்களுக்கு இந்த விவாதத்தில் வெற்றிகரமாக செயல் படக்கூடிய  மனபலத்தையும், உடல் நலத்தையும், கல்வி ஞானத்தையும் இறைவன் அருள வேண்டுமென்று துவாச் செய்வோம். 

இறைவன் இஸ்லாமிய சமூகத்திற்கு ஹம்சா போன்ற சகோதர/சகோதரிகளை தொடர்ந்து அருள்வானாக...ஆமின்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின் 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 
This article inspired by:
1. Br.Hamza's Interview to "One Legacy Radio" 

Source of Information and Br.Hamza's blog:
1. http://www.hamzatzortzis.blogspot.com/

Br.Hamza's Official website: 
1.http://hamzatzortzis.com

IERA official website: 
1. http://www.iera.org.uk

References: 
1. Meaning of the term "Agnostic" taken from thefreedictionary.com.

1 comment:

  1. அருமையான பகிர்வு ! தேடப் பட்ட sourceஐயும் சுட்டிக் காட்டினால் நம்பகத் தன்மையை உருவாக்கும் மாற்று கருத்துடையோருக்கு.

    ReplyDelete