Wednesday, October 13, 2010

உள்ளத்தை உலுக்கிய கேள்வி...

(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக...)


அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் முயற்சியில் தன் இன்னுயிரினை மாய்த்துக்கொண்டது. அதேபோன்று வளமோடு வாழ வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்ட மனிதன் பொருளீட்டும் முயற்சியிலேயே வாழ்வைத் தொலைத்து விட்டு அல்லலுறும் காட்சிகள் இன்றைய நிதர்சனம்.

அலுத்துச் சலித்துப்போய் நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் தனக்காகத் தன் ஐந்து வயது மகன் கதவருகே காத்திருந்ததைக் கண்டு எரிச்சல் அடைந்தார்.

"அப்பா! நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"

"கண்டிப்பாகக் கேட்கலாம். என்ன அது?" தந்தை கேட்டார்.

"அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?"

"இது உனக்குத் தேவையற்ற கேள்வி. இதைக் கேட்பதற்கு என்ன காரணம்?" கோபத்தைக் கொப்பளித்தார் தந்தை.

"சும்மாதான். நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதைத் தயவு செய்து சொல்லுங்களேன்" கெஞ்சினான் மகன்.

"நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சொல்லுகிறேன். ஒரு மணிநேரத்தில் நான் 20 டாலர்கள் சம்பாதிப்பேன்."

தலையைக் குனிந்துகொண்டே "ஓ! அப்படியா" என்ற மகன் தலையைச் சற்றே நிமிர்த்தி "எனக்கு நீங்கள் 10 டாலர்கள் கடன் தர முடியுமா?" என்றான்.

"உனக்கு ஏதோ விளையாட்டுச் சாமான் வாங்கவோ அல்லது தேவையற்ற வீண் செலவு செய்யவோ காசு வெண்டும். அதை என்னிடமிருந்து வாங்குவதற்காகத்தான் நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று கேட்கின்றாயோ? நேரே உன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொள். நீ ஏன் இவ்வளவு சுயநலக்காரனாக இருக்கிறாய் என்று யோசித்துப்பார். நேரம் காலம் இல்லாம நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்த மாதிரி சின்னத்தனமான விளையாட்டுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை."

அச்சிறுவன் அமைதியாக தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். தந்தை கீழே அமர்ந்தார். அவருடைய கோபம் தணியவில்லை. "ஏதோ பணம் வேண்டும் என்பதற்காக என்ன கேள்வி கேட்கிறான் இந்தப் பயல்?" அவருடைய உள்ளம் குமுறியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்த பின், சற்றே அமைதி அடைந்தவராக சிந்திக்கத் துவங்கினார். "அவனிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ? அவன் அப்படி அடிக்கடி பணம் கேட்பவன் இல்லையே. உண்மையிலேயே அந்தப் பத்து டாலருக்கு அவனுக்குத் தேவையான ஏதாவது வாங்க வேண்டும் என விரும்பியிருப்பானோ" இவ்வாறு சிந்தித்தவராக அவனுடைய அறைக்கதவைத் திறந்தார்.

"தூங்கிட்டியாடா பையா?" என்றார்.

"இல்லேப்பா. முழிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றான் மகன்.

"இப்படியே யோசிச்சுப் பார்த்தேன். நான் உன்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேனோ? இன்னைக்குக் கொஞ்சம் வேலை அதிகம். என் எரிச்சலையும் கோபத்தையும் உன்னிடம் காட்டி விட்டேன். இந்தா நீ கேட்ட 10 டாலர்."

மகிழ்ச்சியோடு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த சிறுவன் "ந்ன்றி அப்பா" என்று கூறிக்கொண்டே தன் தலையணைக்குக் கீழிருந்து கசங்கிப் போயிருந்த டாலர் நோட்டுக்கள் சிலவற்றை வெளியில் எடுத்தான். அச்சிறுவன் மெதுவாகத் தன்னிடமிருந்த பணத்தை எண்ணிக்கொண்டே தன் தந்தையை நோக்கினான். தன்னிடம் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டே மீண்டும் தன்னிடம் மகன் பணம் கேட்டிருக்கின்றான் என்பதை அறிந்த தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"அதுதான் பணம் வச்சிருக்கியே. திரும்ப பணம் ஏன் கேட்கிறாய்?" கொந்தளித்தார் தந்தை.

"ஏன்னா போதுமான அளவு இல்லை. இப்ப இருக்கு." மகன் துணிவுடன் சொன்னான்.

"அப்பா! இப்போ என்னிடம் 20 டாலர்கள் இருக்கு... உங்களின் ஒரு மணி நேரத்தை நான் இப்ப வாங்கலாமா?"

நன்றி: தாஜ்மணாளன்

No comments:

Post a Comment