Wednesday, November 10, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 89:1, 2)

இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...

(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும்  புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688

(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும் 'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.

அந்த நாட்களில் சிறிய முயற்ச்சி, பெரிய நன்மை. இன்ஷாஅல்லாஹ்.

லா இலாஹ இல்லல்லாஹ், 
அல்லாஹு அக்பர், 
அல்ஹம்துலில்லாஹ் 
ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)

அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ 680
எனவே அரஃபா தினத்தன்று  நோன்பு நோற்பது நபிவழியாகும்.

No comments:

Post a Comment