எதிரியோட நண்பனுக்குக்கூட இந்த நிலை வரக்கூடாது..
-இப்படிச் சொல்லும்படியான அனுபவம் எனக்கு அடிக்கடி வாய்ப்பதுண்டு! அதில் ஒன்று மிக மிக அதிர்ச்சிகரமானது!!
ஆனால் இதுவரை நானாக வெளியே சொல்லிக்கொண்டதில்லை. என்னுடன் நெருங்கிப் பழகிவரும் நண்பர்கள் பலருக்கே இந்தக்கட்டுரை வாயிலாகத்தான் தெரியவரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்னர்.. ’மக்கள் தொலைக்காட்சி’யில் செய்தி மற்றும் வணிகப்பிரிவுகளுக்கு தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு காரணத்தை முன்னெடுத்துவைத்து பணியில் இருந்து நானாக விலகினேன். அந்தக்காரணம்தான் இந்தக் கட்டுரையின் காரணகர்த்தா.
ஒட்டு மொத்த அலுவலகத்தையும் கூட்டி, பிரியா விடை பெற்ற கடைசி நாளில்.. நிஜமாகவே கண்ணீர் முட்டியது என்னுடன் நெருக்கமாகப் பழகியிராத பலருக்கும்கூட!
“எனது தொண்டையில் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் தெரிவதாக டாக்டர் சொல்லிவிட்டார். நான் கொஞ்சம் மனதளவில் சரியில்லை. இந்த நேரத்தில் – இதே மனநிலையில் என்னால் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற முடியுமா என சந்தேகமாக இருக்கிறது. எனக்கு இப்போது கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைகளும் எடுத்தாக வேண்டும். அதனால் உங்களையெல்லாம் விட்டுப் பிரிகிறேன்..”
-சொல்லிவிட்டு நேராக அந்த டாக்டரைப் பார்க்கத்தான் சென்றேன்.
வாரம் ஒருநாள் மருத்துவமனைக்குப் போவேன். இதுவரை அப்படி எட்டு வாரங்கள் கடந்துவிட்டன. இது ஒன்பதாவது வாரம்.
மருத்துவமனையோடு இணைந்திருந்த மெடிகல் ஷாப்பில் மருந்து வாங்கி, கேஷ் கவுண்ட்டரில் பணம் கட்டி ரசீது வாங்கி.. ”வாங்க” சொல்லிப்போன நர்ஸ் பின்னால் பழகிப்போன மந்திரித்த ஆடு போல நடந்துபோனேன்.
அறை ஒன்றின் கதவைத்திறந்து, லைட் சுவிட்சுகளைப் போட்டபடியே கேட்டார் நர்ஸ்… “என்ன சார், இன்னிக்கும் அட்டெண்டர் யாரையும் கூட்டிட்டு வரலியா?”.
“இல்லை.. நம்ம பிரச்னைக்கு வீணா எதுக்கு மத்தவங்களைப் பயமுறுத்திக்கிட்டு..” என்றேன் நான்.
“அச்சச்சோ! சாருக்கு ஃபேமிலியெல்லாம் வெளியூர்ல இருக்கோ?!” என்றார் பச்சை நிற ஆபரேஷன் தியேட்டர் ஆடைகளை எடுத்து என் கையில் கொடுத்தபடியே.
“இல்லியே.. இந்த ஆஸ்பிடல்லகூட வொர்க் பண்றாங்க” என்றேன் ரொம்ப சீரியஸாக.
“இங்கேயா? யாராக்கும்?!”
ஆர்வமாகக் கேட்ட நர்ஸிடம் நான் சொன்ன பதில் அவரை வெட்கத்தோடு சிரிக்க வைத்துவிட்டது…
“நீங்கதான்! தினம் நீங்கதானே என்னை அட்டெண்ட் பண்றிங்க. நீங்கதான் அக்கறையா கவனிச்சுக்கிறீங்க. அதால நீங்கதான் இங்கே என் ரிலேஷன்” என்று நெகிழ்ச்சியான செய்தியை காமெடி போலச் சொன்னேன். நர்ஸ் சிரிப்பதை நானும் சிரிப்புடன் ரசித்துவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்குத் தயாராகத் தொடங்கினேன்.
ட்ரெஸ் மாற்றிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தேன். மொபைல் போன்களை மரிக்கச் செய்தேன். வாட்ச், பர்ஸ், மொபைல் போன்கள் எல்லாவற்றையும் லேப் டாப் பைக்குள் வைத்து நிமிர்ந்தபோது ’பூச்சி மருந்து’டன் வந்தார் எண்ட ரிலேஷன் நர்ஸ் சேச்சி!
”சேச்சி.. நல்லா எல்லா இடத்துக்கும் ஸ்ப்ரே பண்ணுங்க. போனதடவை சரியா ஸ்ப்ரே பண்ணலைன்னு நினைக்கிறேன். வலி உயிர் போயிடுச்சு” என கையெடுத்துக் கும்பிடாத குறையாக சொல்லிவிட்டு, மட்ட மல்லாக்கப் படுத்துக்கொண்டேன். வாயை நீள அகலத்தில் திறந்து காட்டினேன்.
ஸ்ப்ரே உயகரணத்தின் குச்சி முனையை வாய்க்குள் விட்டு, பளீச் பளீச் என மருந்தடித்தார் சேச்சி. க்க்கசப்பு கண்ணையும் கட்டியது.
“முழுங்கிடாதிங்க, அப்படியே தொண்டைல வெச்சுக்கங்க. தப்பித்தவறி முழுங்கினாலும் பயப்படாதிங்க.. ஒண்ணும் ஆகாது” என இன்றைக்கும்
பொறுமையாகச் சொன்னார் சேச்சி. பாசக்காரப் பயபுள்ளைச் சிரிப்போடு அறையைச் சாத்திவிட்டு வெளியேறினார்.
என் தொண்டைப்பகுதியில் தெளிக்கப்பட்ட கசப்பான் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக உணர்வற்றுப்போகத் தொடங்கியது மருந்து பட்ட பகுதிகளெல்லாம். ஆயில் புல்லிங் போல பாதிக்கப்படப்போகும் எல்லா இண்டு இடுக்குகளுக்கும் மருந்தினைக் கொண்டுபோய் உணர்வற்றலைத் துரிதப்படுத்தினேன்.
அறையில் இருந்த கண்ணாடியில் அந்த நேரம் என்னைப்ப்பார்க்க எனக்கே பாவம்போல இருந்தது. எப்படி இருந்த நான், இப்படி ச்சீயான் மாதிரி ஆகிட்டேன்ன்?!
எல்லாம் திடீரெனத்தான் ஆரம்பித்தது. தொண்டைப்பகுதியில் குபுக் என உருவான திடீர் புண் தேசம் தீராத வலி வேதனைகளைக் கொடுத்து தினம் தினம் என் சித்திரவதையை அதிகப்படுத்தியது. பச்சைத்தண்ணீர் குடித்தால்கூட எரிச்சலெடுக்கும்!
அப்போதும்கூட நானுண்டு என் வேலைகள் உண்டு என இருந்த என்னைத் தலையில் குட்டி, அதட்டி மிரட்டி, அக்கறையோடு இதே மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் என் தோழி ஒருவர். அன்று அவர் இல்லை என்றால் இன்று இங்கே இந்தக்கட்டுரை எழுதக்கூட நான் இருந்திருப்பேனா என்பது சந்தேகமே!
மருத்துவமனை நடத்தும் டாக்டரும் சாமானியரில்லை. பத்மஸ்ரீ விருதெல்லாம் வாங்கியவர். பேரு பெத்த பெத்தராயுடு!
‘மக்கள் தொலைக்காட்சி’யின் தலைவர் பதவியில் இருந்தேன் என்பதால் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எனக்காக மருத்துவமனைக்கே போன் போட்டு ‘எனக்கு சிகிச்சை செய்றதா நினைச்சு கவனமா இவருக்கு சிகிச்சை பண்ணுங்க’ என்றார் சொந்த ‘அய்யா’வின் கரிசனத்தோடு. அவரது மகனும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் அலுவலகத்தில் இருந்தும் டாக்டருக்கு போன் வந்தது!
நெகிழ்ந்தபடியே மருத்துவமனை சென்றேன். டாக்டர் அறைக்குள் சென்றேன். திறக்கச் சொன்னார் வாயை. வெச்சாருங்க பாரு ஆப்பை!
“திஸ் ஈஸ் கால்டு.. சப் ம்யூகஸ் ஃபைப்ரோசிஸ். ப்ரிலிமினரி ஸ்டேஜ் ஆஃப் த்ரோட் கான்சர்…” என ஆரம்பித்து டாக்டர் சொன்ன மற்றதெல்லாம் கிணற்றுக்குள் போய்விட்டது எனக்குள்! ’கேன்சர்’ என்ற ஒரு வார்த்தை போதாதா என் டங்குவாரெல்லாம் அங்குவார் ஆவதற்கு!
உடன் வந்திருந்த அந்த தோழிக்கும் வியர்த்துக்கொட்டியது. தன் பதட்டத்தை பாடுபட்டு மறைத்துக்கொண்டு விலாவாரியாக டாக்டரிடம் வியாதி பற்றி விசாரித்தார்.
“தொண்டைப்பகுதியில் இருக்கும் மெல்லிய திசுக்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகும் ஸ்டேஜ் இது. நாளடைவில் கொஞ்சம்கூட வாயைத் திறக்க முடியாமல் போயிடும். முன்பக்கம் இருக்கும் பற்களைத் தட்டி எடுத்துட்டு ஸ்ட்ரா மூலம் திரவ உணவு கொடுக்க வேண்டிவரும். பத்து வருஷம் பான் பராக் போடுறவங்களுக்கு இந்த வியாதி வரும்” என்றார் டாக்டர் என்னைப் பார்த்தபடியே.
“ம்ஹும்.. எனக்கும் பான்பராக் சனியனுக்கும் ஸ்னானப் ப்ராப்திகூட இல்லை!” எனப்பதறினேன் நான்.
“அப்படின்னா.. வெற்றிலை பாக்கு போடுற பழக்கம் இருக்கா?” – டாக்டர்.
“இல்லவே இல்லை டாக்டர்!” – நான்.
“சுபாரி பாக்கு?” – டாக்டர்.
“அது எப்பவாச்சும் போடுறதுண்டு..” – நான்.
“கரெக்ட்.. அதுதான் காரணமா இருக்கும்” என சொடுக்குப்போட்டார் டாக்டர்.
அப்போது டாக்டரைப் பார்க்க வந்த பயிற்சி டாக்டர்கள் இருவரை அருகே அழைத்து, என் வாயைத் திறக்க வைத்து, டார்ச் அடித்துக்காட்டினார் பெரிய டாக்டர்.
“திங்க் திஸ் ஈஸ் த சிம்ப்டெம்ஸ் ஆஃப் எஸ்.எம்.எஃப்.(சப் ம்யூகஸ் ஃபைப்ரோசிஸ் என்பதன் மருத்துவ அகராதி செல்லப்பெயராம்!)” என்றார்கள் வந்தவர்களும்.
எனக்குள் அமிலம் சுரப்பது அதிகரித்துக்கொண்டே இருந்தது.
உலகமே ஒண்ணுமில்லை என்பதுபோலானது.
மருத்துவமனை வரவேற்பறையில் உட்கார் பிணம்போல (நடந்தால்தானே நடைபிணம்?! J) இருந்த என்னை ஆசுவாசப்படுத்தினார் தோழி. என்னை வெளியே அனுப்பிவிட்டு டாக்டரிடம் நிறையப் பேசி, நிறைய விளக்கங்களுடன் வந்திருந்தார் அவர்.
“அதாவது இது கான்சர் இல்லை. இப்படியே அலட்சியமா விட்டுட்டா இது கான்சர் ஆக மாற வாய்ப்பிருக்கு அவ்வளவே. டாக்டர்கிட்ட விளக்கமா பேசிட்டேன். ஒண்ணும் பயப்பட வேணாம். பெரிசா எதுவும் இல்லை” என்று எனக்கு ஆறுதல் சொன்ன அவரது குரலிலேயே பிரச்னை பெரிசுதான் எனத் தெரிந்தது.
“இப்ப என்ன பண்ணச் சொல்றார் டாக்டர்?”
“தொண்டைக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊசி போட்டு சரி பண்ணலாமாம்!”
“என்னது.. தொண்டைக்குள்ள ஊசியா?!”
அந்த நொடியில் ஆரம்பித்த சுளீர் அது.
மறு நாளில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை அரை நாள் மருத்துவமனை வாசம். உற்றார் – உறவினர் – நண்பர்களிடம் சொன்னால் அவர்களும் கவலையுறுவார்களே என்ற கவலையில் யாருக்கும் விஷயத்தைச் சொல்லவே இல்லை. நான் மட்டும் தனியாக மருத்துவமனைக்கு வருவேன். வாய்க்குள் லோக்கல் அனெஸ்தீசியா (மயக்க மருந்து) தெளிப்பார்கள். சில நிமிடங்களுக்குப் பின் ஸ்ட்ரெட்சர் வரும். தினப்படி ஆபரேஷன் தியேட்டர் நடவடிக்கைகள் இருக்கும்.
நான் என்னைக் கண்ணாடியில் பார்த்து உச்சுக்கொட்டிக்கொண்டிருந்தது இரண்டாவது மாதத்தின் கடைசி வாரம்.
“ஸ்ட்ரெட்சர்ல படுங்க சார்” என்றான் வார்டு பாய்.
“பழவாழ்ல.. நழந்தே வழ்ழேனே” – மரத்து மரித்துப்போன தொண்டையோடு சொன்னேன் நான்.
”இல்ல சார்.. ஆபரேஷன் தியேட்டருக்குள்ள நீங்க நடந்து போனா டாக்டர் எங்களைத்தான் திட்டுவாங்க” என்ற பையனின் தோளில் கைபோட்டபடியே நடக்க ஆரம்பித்தேன்.
“அடங்க மாட்டேங்குறீங்களே சார்.. என்ன இன்னிக்கும் அட்டெண்டர் யாரையும் கூட்டிட்டு வரலியா?” என்றான் பையன்.
“கழ்ணா.. பழ்னிங்கதான் கூழ்ட்டமா வழும். சிழ்ன்க்கம் சிழ்ங்கிழாதான் வழும்” என நான் சொன்னதற்கு விழுந்து விழுந்து ’சிழித்தான்’ பையன்.
ஒரு வாரமாக ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே கடந்து வந்த பாதை அது. தெளிவாக நடந்துவந்தபோது புதிதாக முளைத்தது போல இருந்தது!
எதிர்ப்பட்ட டாக்டர்களும், நர்ஸ்களும், வார்டு உதவியாளர்களும் என்னை விநோதமாகப் பார்த்தது நன்றாகவே தெரிந்தது.
தியேட்டருக்குள் நுழைந்தேன். ஆபரேஷன் டேபிள்மீது ஏறிப்படுத்துக்கொண்டேன் சமர்த்தாக.
“ஹவ் ஆர் யூ சார்?” கேட்டபடியே (அதாவது சொன்னபடியே J ) அருகே வந்த இளம் டாக்டர் என் தோளைத்தொட்டார். சிரிப்பில் ‘ஃபைன்’ சொன்னேன்.
என் கண்களை மூடச்சொல்லி, ஸ்டிக்கர் போல எதையோ எடுத்து ஒட்டிவிட்டனர். நான் பார்த்து பயந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கமான கண்கட்டு ஏற்பாடு!
இருந்தாலும் வழக்கம்போல நான் அரைக்கண்ணால் (கால் ப்ளஸ் கால்) பார்க்கத்தான் செய்தேன்.
அறைக்குள் மின்னல் நுழைந்ததுபோல இருந்தது அடுத்த நொடியில். “ஹாய் கௌதம்..” என்ற குரல் அருகே வந்தது. வந்துட்டார் பெத்தராயுடு!
அருகே வந்து.. வாயைத் திறக்கச் சொன்னார்.. உள்ளே சூடு பரவியது, வெளிச்சம் அடித்துப்பார்க்கிறார் என புரிந்தது.
“குட்.. குணமாகிட்டு இருக்கு” என்று என்னிடம் சொன்னவர், “கொடுங்க…” என வேறு யாரிடமோ சொன்னார். நைஸாக கண்களை முடிந்தமட்டும் திறந்து பார்த்தேன்.
உதவியாளரிடம் சிரிஞ்சை வாங்கி, மருந்தை உறிஞ்சினார் டாக்டர். வழக்கமாக தலை வலி – காய்ச்சலுக்கு போடும் மருந்தின் அளவைவிட ரொம்ப அதிகமாக மருந்தெடுப்பது தெரிந்தது. வாய்க்குள் இன்ஜெக்ஷனைக் கொண்டுபோனால் அஜக் மஜக் என பல இடங்களில் ஒரே முயற்சியில் பன்ச் பண்ண வேண்டும் என்பதால் இப்படி அதிகமான மருந்தினை எடுத்துக்கொள்வதும் வழக்கம்தான்.
ஊசியும் டாக்டர் கையும் என் வாயை நோக்கி முன்னேறியது. சடக்! கண்களை இறுக்க்க மூடிக்கொண்டுவிட்டேன்.
மரத்துப்போன தொண்டைப்பகுதிகளில்.. கடவாய்ப்பற்களுக்கு முன்னும் பின்னும் உள்ள சதைப்பகுதிகளில்.. முன்னும் பின்னும்… மேலும் கீழுமாக.. மின்னல் வேகத்தில் ஊசி குத்தலானார் டாக்டர். உணர்வில்லா பகுதிகளில் ஆங்காங்கே கட்டெறும்பு கடித்துவிட்டு கடித்துவிட்டு ஓடிப்போனதுபோல உணர்விருந்தது! இறுக மூடிய கண்களில் இருந்து தானாக வழிந்தது கண்ணீர். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் போல!
மொத்தம் ஒன்பது இடங்களில் குத்திய டாக்டர் என்னிடம், “அவ்வளவுதான் கௌதம்.. இனிமே வாராவாரம் வந்து இன் ஜெக்ஷன் எடுத்துக்கணும்னு அவசியமில்லை. மாதம் ஒருமுறை வந்தால் போதும்” என்றார். “ஒரு அரைமணி நேரம் அப்சர்வேஷனுக்காக் வெயிட் பண்ணிட்டு நீங்க போலாம்” சொன்னார். போய்விட்டார்.
திரும்ப வரும்போது ஸ்ட்ரெட்சரில்தான் பயணம்!
அரை மணி நேரம் கழித்து உடம்புக்கு எதிர்விளைவு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டபின், மருத்துவமனையை விட்டு வெளியேறினேன். இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் வீட்டுக்குப் போய்விடவேண்டும்.
வலி தெரியாமல் இருப்பதற்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து தன் செயல்திறனை இழப்பதற்குள் வீடு போய், தூக்கத்துக்குப் போய்விடுவதே சாலச் சிறந்தது என என் அனுபவத்தில் கண்டறிந்து வைத்திருந்தேன்.
இருப்பினும் பெரும்பாலும் நான் வீட்டுக்குப் போனதில்லை! பொதுவாக வீடு திரும்புவதற்கே இரவு பத்து மணியைத் தாண்டிவிடும் எனக்கு. அப்படி ஓடிக்கொண்…..டே இருக்கும் ஆள்! எப்போதாவது ஏழு – எட்டு மணிக்கு வீட்டுக்குப் போனால்கூட.. தலையை ஜன்னலில் நுழைத்து ‘மழை வருகிறதா’ எனப்பார்ப்பார்கள் வீட்டில்.
அப்பேர்ப்பட்ட ஒருவன் பட்டப்பகல் நேரத்திலேயே வீட்டுக்குப் போய் படுத்துத் தூங்கினால் என்னமோ ஏதோ என பயத்தில் பதறி விடுவார்கள். அதனால் நேராக அலுவலகத்துக்கே போய் விடுவேன். அன்று முழுவதும் மௌனவிரதம்தான்!
ஓடிய கால்களால் உட்கார முடியுமா என்ன.. ‘மக்கள் தொலைக்காட்சி’ பணியை விட்டு விலகிய சில நாட்களில், ‘பிரமிட் சாய்மிரா தியேட்டர் லிமிடெட்’டில் மார்கெடிங் துறை தலைவராக பணியாற்றத் துவங்கினேன். ”பகுதி நேரப்பணியாகவே இதைச் செய்யுங்கள், உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்” என ’சாய்மிரா’வின் நிர்வாக இயக்குநரும் எனக்கு முன்பே அறிமுகமாயிருந்த நண்பருமான சாமிநாதன் அக்கறையோடு சொன்னபோது என்னால் மறுக்க இயலவில்லை.
வலி வேதனைகள் பின்னிப் பெடலெடுக்கும். தொண்டையின் இரண்டு பக்கங்களிலும் கழலைகள் தோன்றி விடும். எச்சிலைக்கூட விழுங்க முடியாது. ஆனால் அப்போதுதான் அநியாயத்துக்குப் பசிக்கும்!
சுருக் சுருக் வலி பழகிப் போனபின்னர் - மாலை வேளைக்குப் பின்னர்தான் லேசாக திரவ ஆகாரத்தில் இருந்து ஆரம்பிப்பேன். அதிலும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தன.. “சூடாகக் குடிக்கக் கூடாது, ஜில்லுன்னும் குடிக்கக்கூடாது, மசாலா, காரம் இருக்கவே கூடாது!”.
மூன்று நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வலி வடிந்துவிடும். அதனை அடுத்த நான்காவது நாள் மறுபடியும் ஊசி போட்டுக்கொள்ளப் போய்விடுவேன். இப்படியே ஒன்பது வாரங்கள் ஓடிப்போய் விட்டன. இனி மாதாமாதம் போனால் போதும். மாதத்துக்கு அந்த மூன்று நாட்கள் மட்டுமே எனக்கு வேதனைகள்! J
இவ்வளவு ஆனபின்பு கொஞ்சூண்டாச்சும் உற்றார் உறவினருக்குச் சொல்லவேண்டாமா?
அடுத்த மாதம் ஊசி போட்டுக்கொள்ளப்போகையில் என் மாமனாரைத் துணைக்குக் கூட்டிப்போனேன். இன்னொரு மாதம் என் பள்ளித்தோழன் சதீஷ் குமாரைக் கூட்டிப்போனேன். அதற்கடுத்த மாதம் என் கல்லூரித்தோழன் ஒருவனைக் கூட்டிப்போனேன். அதனை அடுத்த மாதம் உடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரைக் கூட்டிப்போனேன். ஆச்சு.. நல்லது கெட்டதுக்கு நாலு பேர் ஆச்சு!
”அடுத்த மாதம் கடைசி ஊசி. அப்புறம் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வந்தால் போதும்” என பெத்தராயுடு டாக்டர் சொன்னதும் அந்தக் கடைசி மாதத்தில் என் மனைவியையும் கூட்டிப்போய் ஆபரேஷன் தியேட்டரைச் சுற்றிக் காட்டிவிட்டேன்.
நான் கூப்பிடாமலேயேகூட இந்த காலகட்டத்தில் எனக்குத் துணை நின்றார்கள் ஒரு சிலர். அக்கறையோடு நலம் விசாரித்தபடியே அளவற்ற ஆதரவு கொடுத்தார் என்னை சிகிச்சைக்கு அழைத்துவந்த அன்புத்தோழி. ’மக்கள் தொலைக்காட்சி’ யில் இருந்து விலகி, வீட்டில் இருந்து, அதன்பின் ‘பிரமிட் சாய்மிரா’வில் பகுதி நேரப்பணியில் நான் சேர்ந்திருந்தாலும்.. ’உங்கள் மருத்துவச் செலவுகளை நாங்கள்தான் கொடுப்போம்’ என அடம்பிடித்துக் கொடுத்தனுப்பினார் அய்யா ராமதாஸ்.
இன்னொருவரைப் பற்றியும் இங்கே நான் சொல்லியாக வேண்டும். ‘அடுத்த ஜென்மத்தில் அவன் எனக்கு மூத்த மகன்’ என என்னைப்பற்றி எல்லோரிடமும் சொல்லும் அந்த மனிதர்.. சித்த மருத்துவர் மூலிகைமணி வேங்கடேசன். அவரும் அவர் குடும்பமும் பார்த்துப் பார்த்து எனக்குச் சிகிச்சை அளித்துக் கவனித்தார்கள். ஓரிரு வரிகளில் சொல்லமுடியாது அவர்கள் என்மீது காட்டிய பாசத்தை.
”இப்ப உங்க பிரச்னையை கண்ட்ரோல் பண்ணியாச்சு. நல்லா குணமாகி இருக்கு. இது அடுத்த ஸ்டேஜுக்கு போகாம.. கேன்சர் ஆகாம பாத்துக்கணும். அடிக்கடி வந்து செக் பண்ணி, தேவைன்னா ஊசி போட்டுட்டுப் போயிடுங்க” என்றார் டாக்டர் பெத்தராயுடு எனக்கு கடைசி ஊசி(கள்) போட்ட நாளில்.
’அய்யய்யோ’ என ஆரம்பத்தில் என்னைப் பயமுறுத்திய டாக்டர், இப்படி கூலாக பேசியதற்கு அவர் போட்ட ஊசிகளைவிட, வேங்கடேசன் கொடுத்த தமிழ் மருந்துகளே பிரதான காரணம் என என் உடலுக்கும் எனக்கும் நன்கு தெரிந்தது. ஆனால் அதை அலோபதி டாக்டரிடம் சொன்னால் ஒப்புக்கொள்வாரா என்ன.. ‘நன்றி’ சொல்லி வந்துவிட்டேன்.
என் சோகக் கதையில் இந்த இடத்தில் ‘நன்றி - வணக்கம்’ போடும்படி நடந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால்.. இதற்குப்பின்னர்தான் க்ளைமேக்ஸ்! இல்லையில்லை.. ஆண்ட்டி க்ளைமேக்ஸ்!! இந்தக் கதையில் இருந்து இந்த உலகத்துக்கு உரத்துச் சொல்லவேண்டிய நீதி!!!
மொத்தமாக என்னைக் கொடுத்துவிட்டேன் மூலிகைமணி வேங்கடேசனிடம். நான் எந்தவகையிலோ அவர்களுக்கு நல்ல காரியம் செய்தேன் எனச் சொல்லி அதற்கு பிரதி உபகாரமாக என் தொண்டைப் பிரச்னையை பூரணமாகக் குணப்படுத்தி விடவேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு நிறைய மெனக்கெட்டார்கள் அந்தக்குடும்பத்தில்.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு மருந்து குடிக்க வேண்டும். அப்போது ஆரம்பித்து இரவு படுக்கைக்குப் போகும்வரை வரிசையாக வேங்கடேசன் கொடுத்த மருந்து மாத்திரைகள் க்யூ கட்டி வாய்க்குள் போகும்!
தலை வலி, காய்ச்சல் என்றால்கூட அவர் வீட்டில்தான் நிற்பேன். அப்படி ஒரு கடும் காய்ச்சலில் அவர் வீட்டுக்கதவை நான் தட்ட.. அவர் தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவமனையில் என்னைச் சேர்த்துவிட.. அங்கே நான் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான்.. இல்லாத நோய்க்காக பெத்தராயுடு டாக்டர் என் தொண்டையை இத்தனை காலம் பதம் பார்த்துவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான உண்மை எனக்குத் தெரிய வந்தது!
மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு கிடந்த என்னைப் பார்க்க வந்த தோழி கூடவே ஒரு மருத்துவ நிபுணரையும் அழைத்துவந்தார். அவர் பெயர் நஞ்சப்பன். ’அப்பல்லோ’வின் அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர். ‘அய்யோ அம்மா’ என அலறல் நிலையில் கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு முதல் உதவி செய்து, அவர்கள் பிரச்னை என்னவென விரைந்து கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் கவனத்துக்கு அனுப்பிவைக்கும் சிறப்பு மருத்துவர் அவர்.
என் ஊசி புராணம் முழுக்க கவனமாகக் கேட்டறிந்தவர், “பயாப்ஸி ரிப்போர்ட் எங்கே?” என்றார். நான் ’திருதிரு’வென விழித்தேன்.
உடலில் பாதிக்கப்பட்ட இடத்தைத் துளியூண்டு கிள்ளியெடுத்து அதனை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து, ‘ஆமாம் இது கேன்சர்தான்’ அல்லது ‘இல்லை இது கேன்சருக்கு முந்தைய கட்டம்” அல்லது ‘இது கேன்சர் இல்லை’ என திட்டவட்டமாக கொடுக்கப்படும் ரிப்போர்ட் அது.
“இல்லை.. எனக்கு இதுவரை பயாப்ஸி எடுக்கவில்லை” என்றேன்.
காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து முடிந்ததும் முதல் வேலையாக என்னை வேறு ஒரு மருத்துவ நிபுணரிடம் அழைத்துப்போனார் நஞ்சப்பன்.
வாயைத் திறக்கச் சொன்னார் அந்த நிபுணர். கவனமாக ’ஆ’ராய்ந்து கடைசியில் நஞ்சப்பனிடம் சொன்னார்.. “யெஸ்.. உங்க சந்தேகம் சரிதான்னு தொணுது. இது சப் ம்யூகஸ் ஃபைப்ரோசிஸ் மாதிரி தெரியலை. ஐ திங்க்.. டெண்டல் ப்ராப்ளமா இருக்கும்”.
அடுத்து நான் நின்ற இடம்.. சென்னை – எல்டாம்ஸ் சாலையில் சின்னதாக க்ளினிக் வைத்திருக்கும் பல் டாக்டர் ஜான் செபஸ்டியன் முன்னே.
நல்ல டாக்டர் என்றால் அவரைப் பார்த்ததுமே பாதி குணமான தெம்பு நமக்கு வரவேண்டும். வந்தது ஜானைப் பார்த்த மாத்திரத்தில்!
ஆதௌகீர்த்தனாரம்பத்தில் இருந்து என் ஊசி புராணத்தை சொல்லச் சொல்லிக் கேட்டவர், எக்ஸ்ரே எடுத்துவரச் சொன்னார்.
எக்ஸ்ரே பார்த்துவிட்டு, ரொம்ப யோசித்தார். சினிமாவில் வரும் டாக்டர்கள் போலவே கண்ணாடியைக் கழட்டியபடியே பேச ஆரம்பித்தார்.. ஆனால் சினிமா டாக்டர்களுக்கு முரணாக நல்ல செய்தி சொன்னார்..
“உங்களுக்கு இருந்தது மிகமிக சாதாரணமான பிரச்னை. அதிக டென்ஷன் காரணமாக தூக்கத்தில் உங்க பற்களைக் கடிச்சிக்கறிங்க. இரண்டு பல் வரிசைக்கும் நடுவே மாட்டிக்கொள்ளும் உள் உதடு பகுதிகள் புண்ணாகிடுது. அது கோடுபோல நீண்டு, கடவாய்ப்பல் வரை நீளுது. தொடர்ந்து நீங்க இப்படி பற்களைக் கடிச்சுக்கிட்டே இருக்கதால நிரந்தரமா புண்ணும் உங்களுக்கு இருந்திருக்கு. அதை ’சப் ம்யுகஸ் ஃபைப்ரோசிஸ்’னு எடுத்துக்கிட்டு தொடர்ந்து உங்களுக்கு ஊசி போட்டிருக்காங்க. அதுவும் ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன்ஸ் தொடர்ந்து போட்டதால இப்ப அந்த இடம் நிஜமாகவே பாதிக்கப்பட்ட பிரதேசம்போலத்தான் மாறி இருக்கு. இருகிப்போய் இருக்கும் தொண்டைப்பகுதியை இளக்குவதற்காக ஸ்டீராய்டு ஊசி போட்டிருப்பாங்க. அதன் பக்க விளைவுகளை நீங்க அனுபவிச்சிட்டு இருப்பீங்க..”
“ஆமாம் டாக்டர்” என குறுக்கே புகுந்து சொன்னேன் நான். “என் தலை முடி நிறைய கொட்டிவிட்டது. உடல் திடீர் என பருத்துவிட்டது. தாவாய் எலும்பே வளைந்துவிட்டதாகத் தெரிகிறது. மேல் பற்களும் கீழ் பற்களும் முன்பு போல ஒட்டவில்லை. பல் வரிசைகள் முன் பின்னாக இருக்கின்றன” என அழாத குறையாகச் சொன்னேன்.
ஆறுதல் சொன்னார் ஜான் செபஸ்டியன்.. “ஒன்றரை வருஷம் ஸ்டீராய்டு எடுத்திருக்கீங்க. அதன் விளைவுகள் சுத்தமா உங்களை விட்டு போகணும்னா குறைஞ்ச பட்சம் இரண்டு மூணு வருஷமாச்சும் ஆகும். பயப்படாதீங்க.. நான் தர்ற ஸ்ப்ளிண்ட்டை தினமும் தூங்கும்போது பற்களைச் சுற்றிப் போட்டுக்கங்க. தொடர்ந்து புண்ணாகுறதைத் தடுக்கலாம்.. அதே சமயம்.. இப்ப இருக்கும் நிலையில.. உங்க தொண்டைப்பகுதி ஸ்டீராய்டால ரணமாகித்தான் இருக்கு. தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க சாப்பிட்டு வந்த இயற்கை மருந்துகள் உங்கள் ரணத்தைப் போக்கி, உங்களைக் காப்பாத்தி வந்திருக்கு. அதனால இனிமேல் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது தொடர்து ஒரு காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர் ஒருவரைப் பார்த்து செக் பண்ணிட்டே இருங்க” என்றவர், நான் சாப்பிட்டுவந்த இயற்கை மருந்துகளை கவனமாகக் கேட்டுக்கொண்டார். “உங்களை மாதிரி அடுத்து யாராவது வந்தா சொல்ல உபயோகமா இருக்கும்ல” என்றார்.
என் பற்களை அளவெடுத்து.. அந்த அச்சில் ஒரு கவசம் (அதுதான் ஸ்ப்ளிண்ட்) தயாரித்துக் கொடுத்தார் ஜான் செபாஸ்டியன்.
அது ஆச்சு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. இப்போதும் கூட இன்குபேட்டர் குழந்தையைப்போல்தான் என் தொண்டைப்பகுதியைப் பாதுகாத்துக்கொண்டு வருகிறேன். ஒருவருக்கு பதிலாக இரண்டு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்களிடம் தனித்தனியாக அவ்வப்போது செக் பண்ணிக்கொண்டே இருக்கிறேன்.
ஒருவர்.. “இருக்கு.. ஆனா இல்லை. இப்போதைக்கு பயமில்லை” என்கிறார்.
இன்னொருவர்.. “இல்லை.. ஆனா இருந்திருக்கலாம். இப்போதைக்கு பயமில்லை” என்கிறார்.
ஆக மொத்தத்தில்.. ’இப்போதைக்கு பயமில்லை’ – இதுதான் என் நிலை.
ஒரு சின்ன பல் கடிப் பிரச்னை என்னவெல்லாம் பண்ணிவிட்டது என்னை! இல்லாத ஒரு பிரச்னைக்காக எனக்குக் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை, இப்போது என்னை அந்தப் பிரச்னை இருந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அத்தனை இழப்புகளையும் எனக்கு கொடுத்திருக்கிறது! இனியும் கொடுக்கக் காத்திருக்கிறது!!
இந்தக் காலகட்டத்தில் இதுவரை பத்துப் பதினைந்து டாக்டர்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களில் ஒருவர் சொன்னதுதான் என்னால் உங்களுக்குக் கிடைக்கும் பாடம்..
“எப்பவுமே.. உடம்புக்கு என்ன பிரச்னைன்னாலும்.. நமக்கு இதில்தான் பிரச்னை என நீங்களே முடிவு பண்ணிக்கொண்டு, எடுத்த எடுப்பில் பெரிய மருத்துவ நிபுணர்களைப் பார்க்கக் கூடாது. ஒழுங்கா மரியாதையா ஆரம்பத்திலேயே ஒரு சாதாரண பொது மருத்துவரைப் பார்த்திருந்தீங்கன்னா இந்த அளவுக்கு சிரமப்பட்டிருக்க மாட்டிங்க. ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை நிபுணரைப்பார்த்தீங்கன்னா அவர் எல்லாத்துக்கும் ஆபரேஷன்தான் தீர்வுன்னு சொல்வார். இது இங்கே வணிகமயமாகிப்போன மருத்துவ உலகத்தில் சகஜம்..”.
மருத்துவத்துக்குத்தான் என்றில்லை.. எல்லா விஷயத்துக்கும் இந்த பாடம் பொருந்தும்தான். சின்ன கல்லு வேண்டுமானல் பெத்த லாபத்தைத் தரலாம்.. பிரச்னை என்று வந்தால்.. சின்னதை சின்னதாகப் பார்.. பெரியதை பெரியதாகப் பார்! என்னைப்பார் கற்றுக்கொள்!
No comments:
Post a Comment